சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி
சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது.
தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது. இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும்.
மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் பூமிக்கு அருகில் வருகிறது
18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19 ம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992 ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும், சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன. வரும் பௌர்ணமி அன்று சந்திரன் வழக்கமான அளவை விட சுமார் 90 சதவீதம் பெரியதாக இருக்கும்.
அடுத்த மாத பௌர்ணமி வரை இதை பார்க்க முடிவதுடன் வெளிச்சமும் அதிகமாக இருக்கும். சூப்பர்மூன் என்ற இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. அதாவது 18 முதல் 19 ஆண்டு இடைவெளியில் நிகழ்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் இமெயில்கள் பரவி வருகின்றன. வானில் அதிசயங்கள் நிகழும் போது நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனினும் பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது.
கடற்கரை நகரங்களில் மட்டும் வானிலையில் சிறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் அலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜான் கெட்லே தெரிவித்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டில் சூப்பர்மூன் ஏற்பட்ட போது அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை டிரேசி என்ற சூறாவளி புரட்டிப் போட்டதாகவும், 1974 ல் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சந்திரன் மிக அருகில் வருவதால் ஏற்படும் வானிலை மாற்றங்களால், பூமியில் வெப்பம் தணியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கோடைகால வெப்பத்திலிருந்து இந்த ஆண்டு மட்டும் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.